Wednesday, 30 March 2016

ஜெயலலிதாவை சிஎம் ஆக்கியதற்கு போதும் போதும் என்று அனுபவிக்கும் KKSSRR ராமச்சந்திரன்

அதிமுகவின் நிறுவனரான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணி, ஜானகியம்மாள் அணி என்று அதிமுக இரண்டாக உடைந்து, அரசியல் களம் அதகளப்பட்டுக்கொண்டிருந்தபோது,; ஜானகியம்மாளுக்கு ஆதரவாக இருந்தவர் ஆர்.எம். வீரப்பன். ஜெயலலிதாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிட அவர் தலைமையில் பல தலைவர்கள் கச்சைகட்டிக்கொண்டிருந்தபோது, ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்து அவரை அரசியலில் காலுான்றச் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்கரசர், நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன்.

31 அதிமுக MLA களை இவர் வடநாட்டுக்கு விமானத்தில் கூட்டி சென்று ஹோட்டல்களில் அடைத்து வைத்து ஜெயலலிதாவின் அரசியல் பலத்தை பாதுகாத்து ஜானகி அணியை கவிழ்ப்பதற்கு பெரும் உதவி செய்தார். மாட்டுக்கார வேலன் என்ற பட்டத்தை அதன் மூலம் பெற்றுகொண்டார். ஜெயலலிதாவை அரசியல் அரங்கிற்கு தனது சுயநலம் கருதி கொண்டுவந்ததற்கு இவர் தமிழ்நாட்டு மக்களிடம் பாவமன்னிப்பு கேட்கவேண்டும் .....ஜெயலலிதாவிடம் நன்றி என்ற வார்த்தையே கிடையாது அதனால்தானோ என்னவோ அவரால் பயன்பெற்ற எல்லோருமே அவரின் காலை வாரப் போகிரர்கள்...வரலாறு அதையும் காணத்தான் போகிறது அதிலும் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரைவிட ஒருபடிமேலாக தன் அதிகார பலத்தால் ஜெயலலிதாவுக்காக பெரும் கஷ்டங்களை சந்தித்து அவரை அரசியலில்‘‘ லைம் லைட்டுக்கு ’’ கொண்டு வந்தவர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்கரசர் ஆகிய இருவர். இவையெல்லாம் ஜெயலலிதாவே நினைத்துப்பார்க்க விரும்பாத விஷயங்கள் மற்றும் அதிமுகவின் சீனியர்கள் மட்டுமே அறிந்த சேதி. காலச்சூழலில் ஜெயலலிதாவிடம் முரண்பட்டு கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திமுகவிலும், திருநாவுக்கரசர் தனிக்கட்சி, பாஜக தற்போது காங்கிரஸ் என ஐக்கியமானது காலத்தின் கோலம்.

தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக, சட்டசபையில் ஜெயலலிதாவின் பலத்தை காட்ட அப்போதைய அதிமுக எம்.எல்.ஏ.,க்களை குதிரைபேரம் பேசி விருதுநகரில் தன் ஸ்பின்னிங் மில்லில் தங்க வைத்து புதிய அரசியல் ஃபார்முலாவை அரங்கேற்றியவர் இதே கே.கே.எஸ்.எஸ்.ஆர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரோடு நெருக்கமாக இருந்த அவரின் நிலைதான் இப்போது பெரும் பரிதாபத்திற்குரியது.

திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., இதே சாத்தூர் தொகுதியில் ( இப்போது அது அருப்புக்கோட்டை தொகுதி) 4 முறைக்கு மேல் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, தொகுதிக்கு புதுமுகமான அதிமுகவை சேர்ந்த வைகைச்செல்வனிடம் 11 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது 2016-ம் சட்டசபை தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட தயாராகும் இதே கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தேர்தல் செலவுக்காக தனது சொத்துக்களை சத்தம் இல்லாமல் விற்று பணம் திரட்டி வருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... 'என்ன பாஸ் நீங்க... சாதாரண கவுன்சிலர்கிட்டயே கோடிகளில் புரளும்போது அமைச்சர், எம்.எல்.ஏ., என்று பல முறை பதவி வகித்த அவரிடம் இல்லாத பணமா?' என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதுதான் உண்மை. பாரம்பர்யமாக பஞ்சு வியாபாரத்தை தொழிலாக கொண்ட குடும்பத்தை சேர்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர், பணம் வசதி படைத்தவர்தான். ஆனால் தாராளமாக பணம் செலவழிக்கும் பழக்கம் கொண்டவர். கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு நாராயணன், ரமேஷ் என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் உண்டு. எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சராக பதவி வகித்த அவர், தனது மகன்கள் மற்றும் மகளுக்கு அவர்களது பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்தார். அருப்புக்கோட்டையில் இளைய மகன் ரமேஷ்க்கு கதிர் சில்க்ஸ் என்ற பெயரில் புதிதாக பெரிய துணிக்கடையும், புது ஸ்பின்னிங் மில்லும் ஆரம்பித்து கொடுத்தார். ஆட்சி மாறினால் ஏதாவது பிரச்னை வருமோ என்று நினைத்து தனக்கென்று தனியாக பணம் மற்றும் சொத்துக்களை வைத்துக்கொள்ளவில்லை. கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது மட்டும் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வரை செலவழித்தார். இந்நிலையில் திமுக தோற்று அதிமுக ஆட்சிக்கு வந்தது. தேர்தலில் தோல்வி அடைந்த அவரால் வழக்கம் போல் தாராளமாக செலவு செய்ய முடியவில்லை. தன் மகன்கள் கையை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலைமை. இந்நிலையில் 2016 சட்டசபை தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தேர்தலி செலவுக்காக பணம் திரட்டுவது தொடர்பாக குடும்பத்தினரிடம் கடந்த வாரத்தில் விவாதித்திருக்கிறார். “ஏற்கனவே கடந்த தேர்தலில் அதிகம் செலவு செய்ததில் பணம் நெருக்கடி. பட்ஜெட் போட்டு செலவு செய்யாமல் இப்படி தாராளமாக கோடிக்கணக்கில் செலவு செய்தால் உங்கள் காலத்துக்கு பிறகு நாங்கள் எல்லாம் நடுத்தெருவுக்குதான் வரவேண்டும் ”என்று அப்போது அவரது மகன்கள் கை விரித்ததாக சொல்லப்படுகிறது. பெற்ற பிள்ளைகளே இப்படி சொல்லி விட்டார்களே என்று மனம் நொந்து போனார் அண்ணாச்சி. பிறகு விஷயம் அறிந்த குடும்ப நண்பர்கள், கே.கே.எஸ்.எஸ்.ஆரின் மகன்களிடம் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்களது பெயரில் இருக்கும் சில சொத்துக்களை விற்பதற்கு அவர்கள் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் அருப்புக்கோட்டையில் இளைய மகன் ரமேஷ்க்காக தொடங்கப்பட்ட கதிர் சில்க்ஸ் மற்றும் விருதுநகர் தந்தி மரத்தெருவில் உள்ள 5 பெரிய வீடுகளில் 3 வீடுகள் என்று சில சொத்துக்களை விற்றிருக்கிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். 'கஷ்டப்பட்டு' சம்பாதித்த சொத்துக்களை இப்படி அரசியலுக்காக விற்கிறாரே என்று இதனால் கொஞ்ச காலமாக அவரது குடும்பத்தில் புகைச்சல். இதில் அண்ணாச்சிக்கு ஆறுதலான விசயம், சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் அவரது மகள் தனது ஒரு பெரிய சொத்தை விற்று 3 கோடி ரூபாய் வரை தேர்தல் செலவுக்கு தருவதாக உறுதியளித்துள்ளாராம்.

மகளின் ஆறுதல் வார்த்தையால் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கொஞ்சம் மனம் தேறியிருக்கிறார். இப்போதெல்லாம் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தனக்கு நெருக்கமானவர்களிடம் பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்று சொல்லி கலங்குகிறாராம். அதோடு ‘‘ எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்னு சொல்லி வருத்தப்படுகிறாராம். கவலைப்படாதீங்க அண்ணாச்சி மீண்டும் நீங்க அமைச்சரானீங்கன்னா அத்தனை பேரும் திரும்ப வருவாங்க...அதானே அரசியல்!

தேமுதிக வானிலை அறிக்கை: 18 மா.செக்கள்,11எம்.எல்.ஏக்கள் ...ஒருபுறமும்...மற்றவர் மற்றொருபுறமாக இரண்டு பெருநிலப்பரப்புகளிலும் மேகம் தாழ்வாக உள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வட சென்னை தேமுதிக மாவட்ட செயலர் யுவுராஜ், அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்ட போது பொருளாளர் மு.க.ஸ்டாலினும் உடனிருந்தார். சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவை இழுத்து பலமான கூட்டணி அமைக்க முயற்சி செய்தது திமுக. பல கட்ட பேச்சுவார்த்தைகளை ரகசியமாக நடத்தியது. ஆனால் தேமுதிகவோ மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்து விட்டது. இது திமுகவை மட்டுமல்ல தேமுதிக நிர்வாகிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் ஆங்காங்கே தேமுதிக நிர்வாகிகள் திமுகவுக்கு தாவி வருகிற நிலை உருவாகியுள்ளது.

மதிமுக மாவட்ட செயலாளர்களை வளைத்தது போல தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் பலரை தங்கள் பக்கம் இழுக்க 'ஆபரேசன் ஸ்டாலின்' ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம். முதலாவதாக மாட்டியிருப்பவர் வடசென்னை மா.செ. யுவராஜ் என்கின்றனர். விஜயகாந்த் எல்லா இடத்திலும் பேரம் பேசி பேசி தனது கட்சிகாரர்களையே வெறும் டம்மி பீசாக்கினதுதான் மிச்சம்...சுடு மணலில் நடக்க கட்சிகாரர்கள இனியும் தயாரில்லைங்கோ . முதல் மா.செ யுவராஜ் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு சென்ற வடசென்னை தேமுதிக மாவட்ட செயலாளர் யுவராஜ், கருணாநிதியின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைந்து கொண்டார். இணைந்தது ஏன்? வடசென்னையில் பரவலாக செல்வாக்கு பெற்றுள்ள யுவராஜ் திமுகவில் இணைந்தது பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். விஜயகாந்த் கூட்டணி தொடர்பாக எடுத்த முடிவு தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

செயலற்ற அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றும், அதற்காக திமுகவுடன் கூட்டணி அமைப்பதே சிறந்தது என்றும் கருதினோம். தொண்டர்களின் விருப்பமும் அதுவாக இருந்தது 18மா.செக்கள், 11 எம்.எல்.ஏக்கள் திமுக உடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அதிருப்தியில் உள்ள தேமுதிகவினரிடம் தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். தேமுதிகவில் இருந்து 18 மாவட்ட செயலாளர்கள், 11 எம்.எல்.ஏக்களை தங்கள் வசம் இழுக்க வேண்டும் என்று பலருக்கும் திமுகவில் இருந்து அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதிமுக ஆட்சியில் தேமுதிகவினர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த ஆட்சியை வீழ்த்த சரியான கூட்டணி அமைக்காத விஜயகாந்த்தின் பின்னால் இனியும் செல்ல நாங்கள் தயாராக இல்லை. அதனால் திமுகவிற்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார் யுவராஜ்.



ராகுல் -இளங்கோவன் .....திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரசுக்கான தொகுதி உடன்பாடு குறித்து பேச கடந்த வாரம் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வந்து திமுக தலைவர் கலைஞரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், திமுக தலைவரின் கருத்துக்களை காங்கிரஸ் மேலிடத்தில் தெரிவிப்போம். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார். அவர், இன்று காங்கிரஸ் துணைத் தவைர் ராகுல் காந்தியை சந்தித்தார். காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் உள்ள வாக்கு வங்கியை குறைத்து மதிப்பிட்டால் திமுக மிக பெரும் தவறு இழைப்பதாகவே கருதவேண்டும் அவருடன் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் உடனிருந்தனர்.

தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது தேமுதிக கூட்டணிக்கு வராததால், அதே அளவு ஒதுக்குமாறு காங்கிரஸ் கேட்பதாகவும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு அதிக செல்வாக்கு இல்லை என்பதாலும், ஜி.கே.வாசன் பிரிந்து சென்றுவிட்டதாலும் இந்த முறை அத்தனை தொகுதிகள் ஒதுக்க முடியாது என்று திமுக கூறிவருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன

சீட் வேண்டாம் கட்சிப் பதவியே போதும் .....மாட்டிக்கிட்ட ராராக்கள் அலரல்....

அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் என்பது ஏறக்குறைய முழுமைக்கு வந்து விட்டது. நாளையோ (31.03.2016) அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ வேட்பாளர் பட்டியலும், கூடவே தேர்தல் அறிக்கையும் சேர்ந்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத நேர்காணலாக இந்த நேர்காணல் அமைந்ததற்கு, கட்சித் தலைமையின் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மந்திரிகளே காரணம் என்று கூறப்படுகிறது. ''ஒரு மந்திரிக்கு தலா மூன்று மாவட்டங்களில் ஆதரவும், செல்வாக்கும் என்ற நிலை தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. செல்வாக்கு பெற்ற அவர்களை தவிர்த்து விட்டு ஒதுக்கப்பட்டவர்களாய் மூலையில் முடங்கிக் கிடந்தவர்களை'' வரச் சொல்லுங்கள் என்றுதான் இந்த முறை நேர்காணலுக்கு சொல்லி விட்டிருக்கிறார், கட்சியின் பொ.செ.வான ஜெயலலிதா. ' தொகுதிக்கு ஐந்துபேர் , நாளொன்றுக்கு ஐந்து தொகுதி என்ற கணக்கில் இதுவரையில் ஆயிரத்து ஐநூறு பேருக்கு குறையாமல் அம்மா நேர்காணல் மூலம் பார்த்து விட்டார். அதிலிருந்து சிலரை அவர் தேர்வு செய்யலாம். அதேபோல் நேர்காணலின்போது அம்மாவை அருகிலிருந்து பார்ப்பதற்கே ஒவ்வொரு தேர்தலின் போதும் பணத்தைக் கட்டியவர்கள்தான் அதிகம். இம்முறை அப்படி அனைவரையும் அம்மா அழைக்காதது ஏமாற்றமே' என்கின்றனர், கார்டன் வாசலில் காத்துக் கிடக்கும் கட்சியினர். கைகளில் பளபளா தங்க வளையல்களோ, நூறு கிராம் எடையைக் கடந்த கம்மல்களோ, அடிவயிற்றைக் தொட்டுக் கொண்டிருக்கும் டாலர் அடையாளங்களோ இல்லாத முகங்கள்தான் இம்முறை கார்டனில் நடந்த நேர்காணலுக்கு அதிகமாய் சென்று திரும்பிய முகங்கள். மந்திரிகள், மாவட்ட மற்றும் மாநிலப் பொறுப்பில் இருப்பவர்கள், இம்முறை கார்டனில் இருந்து வந்த அழைப்புக்காக சென்றதில் அதிகபட்சம் தங்களை நல்லவர்கள் என்று நிரூபிப்பதற்கான சந்திப்பாகவே இருந்தது.

சபாநாயகர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட டி.ஜெயகுமாருக்கு மாற்றாக, அவருடைய மகன் ஜெயவர்த்தனுக்கு எம்.பி. தேர்தலில், ஜெயலலிதா வாய்ப்பளித்தார். இம்முறை அதே போன்ற திருப்பமாக பல மந்திரிகளின் பிள்ளைகளுக்குத்தான் வாய்ப்பு கொடுக்கப்படும் என்கிறார்கள். செல்வாக்கான மந்திரிகளின் தொகுதிகளில் செல்லாக்காசாக இருந்தவர்களுக்கு வாய்ப்பும் அதிகபட்சமாக இருக்கலாம் என்கிறார்கள். செங்கோட்டையன், சி.வி.சண்முகம், செம்மலை போன்றவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் கார்டனுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தலைக் கவனித்து வெற்றியைப் பெற்றுத்தரும் பொறுப்பாளர்களாக அவர்களை நியமிக்கும் முடிவு ஏற்பட்டுள்ளதாம். பிரச்னைக்குரியவர்கள் என்ற அடிப்படையில் விசாரணைக்கு ஆளாகி நின்ற மந்திரிகளிடம் ஆளுக்கு 5 முதல் 10 தொகுதிகளை ஒப்படைத்து, அந்த தொகுதிகளுக்கான 'அத்தனையையும்' ஏற்று வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதே அவர்களுக்கான அசைன்மெண்ட். பிரச்னையில் சிக்கியிருக்கும் மந்திரிகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட ' சீட்' கொடுத்தாலும், அவர்களால் பத்து தொகுதிகளையும் 'தாராளமாக' கவனித்து தங்கள் தொகுதியையும் காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பதும் கேள்விக்குறி. இவைகள் ஒரு பக்கம் இருக்க, ' கட்டுகள் குறித்த ' விசாரிப்புகள் இன்னும் முழுமையாவதாகத் தெரியவில்லை என்கிறார்கள்.

சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள இரண்டு மாவட்டங்களில்தான் அதிகபட்சமாக சீட்டுக்கு நோட்டு செலவழித்து ஏமாந்தவர்களின் பட்டியல் இருப்பதாக கார்டனுக்கு தகவல் பல ரூபங்களில் போயிருக்கிறது. 'சீட்' கேட்டு பல ரூட்களில் ஆளைப் பிடித்து பணத்தை இறைத்தவர்கள் இப்போது, 'தாங்கள் செலவழித்த பணம் குறித்த எந்த தகவலும் வெளியில் வராமல் இருந்தாலே போதுமானது, எங்களுக்கு சீட்டே வேண்டாம்... அதைவிட கொடுத்த பணமும் வேண்டாம்' என்று அலற ஆரம்பித்திருப்பதும் அதே ரூபத்தில் கார்டனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. சென்னையில் இரண்டு மண்டலக் குழுத்தலைவர்கள், காஞ்சிபுரத்தில் இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று அணித்தலைவர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர், திருவள்ளூரில் இதே லிஸ்ட்டில் ஆறு பேர் போக, மகளிருக்கும் அவர்களுடைய உறவு முறைகள் மூலமாக 'கட்டுகள்' வீணான இடத்தில் போய்ச் சேர்ந்திருக்கிறதாம். கட்டுகளை வாங்கிய பிரமுகர்கள், " அதைவிட கொஞ்சம் அதிகமாகவே திருப்பிக் கொடுத்துடறேன்... நான் வாங்கிய பணத்தை ' அந்த' ரூட்டில் போய்த்தான் கொடுத்தேன் என்று மட்டும் காட்டிக் கொடுத்து விடாதீர்கள்" என்று அலறுகின்றனராம். கட்டுகளை மூட்டைக் கட்டிக் கொடுத்தவர்களோ, "இன்னும் கூடுதலாக வேண்டுமென்றால் கூட எந்த ரூட்டிலாவது கட்டுகளை ஏற்பாடு செய்து கொடுத்து விடுகிறோம். நாங்கள் உங்களிடம் கொடுத்த கதை மட்டும் வெளியே தெரியவேண்டாம். இருக்கிற உள்ளாட்சிப் பொறுப்போடும், கட்சிப் பொறுப்போடும் கவுரவமாக இருந்து விட்டுப் போய்விடுகிறோம். கட்சிப் பொறுப்பில் கை வைத்தால், அத்தோடு நாங்கள் மொத்தமாக காலி ஆகி விடுவோம். எங்களை விட்டுடங்கப்பா" என்று “கோடி'களில் கதறுகின்றனராம். ஏப்ரல் முதல் வாரத்தில் மாற்றம், முன்னேற்றம்... ஏற்றம், இறக்கம்... உள்ளே, வெளியே... என்று பல காட்சிகள் அரங்கேறுவதைக் காணலாம். -விகடன்.காம்

புதிய தமிழகம் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறதா?அதிமுக வுடன் பேச்சுவார்த்தையா?

தி.மு.க., கூட்டணியில் இடம்பெறவும், தொகுதி பங்கீடு குறித்தும், ஏற்கனவே திரைமறைவில் முன்னாள் அமைச்சர்கள் இருவரிடம், புதிய தமிழகம் ரகசிய பேச்சு நடத்தியது.குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், தனக்கு கட்டாயம் ராஜ்யசபா எம்.பி., பதவி வேண்டும் என, கிருஷ்ணசாமி, நிபந்தனை விதித்திருந்தார்.ஆனால், அதை ஏற்க, தி.மு.க., தரப்பு மறுத்துவிட்டது. இதனால், கருணாநிதியை நேரில் சந்தித்து பேசுவதற்காக, நேற்று கோபாலபுரம் இல்லத்துக்கு காரில் வந்து கொண்டிருந்த கிருஷ்ணசாமி, பாதி வழியிலேயே திரும்பி விட்டார்.இதனால், கூட்டணி உடன்பாட்டில், இரு கட்சிகளுக்கும் இடையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஒரு சில கட்சிகள் பணம் பேரம் பேசுவதாக செய்திகள் வருகின்ற நிலையில் இந்த கட்சி ராஜ்ஜிய சபா சீட்டு தானே கேட்கிறது.தங்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும் என்ற கோரிக்கை பாராட்டப்பட வேண்டியதுதானே.

Tuesday, 29 March 2016

சரத்குமார் மீண்டும் போயசுக்கு வந்த ரகசியம்......மாட்டிக்கிட்ட நாட்டாமைக்கு வேற வழி?

என்னை கறி வேப்பிலையாக பயன்படுத்தி தூக்கி எறிந்து விட்டார்கள் ’’ என்று அதிமுக மீது குற்றம் சாட்டிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு திரும்பி வந்திருக்கிறார். ஜெ.வின் அவமதிப்பால் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெறுவார் என்ற அளவில் பேட்டி அளித்துவந்த அவர் கடந் வாரம் சத்தமில்லாமல் கார்டன் சென்று பேசிவிட்டு வந்திருக்கிறார்.

சரத்குமாரின் கோபத்தை தணித்தது எது என்று விசாரணை செய்தால் விஷயம் வேறுவிதமாக இருக்கிறது. தனது கோபம் தணிந்தோ அல்லது கட்சியின் எதிர்காலம் கருதியோ சரத்குமார் மீண்டும் காரடன் செல்லவில்லை. அம்மா அழைப்பை புறக்கணித்திருந்தால் இந்நேரம் சரத்குமார் ஊடகங்களில் வைரலாகி இருந்திருப்பார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். நடிகர் சங்க விவகாரம் உள்பட பல விவகாரங்களை காட்டி அவர் அதிமுக கூட்டணிக்கு வந்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடியை ஆளும்கட்சி ஏற்படுத்திதாலேயே அவர் காரடனில் கைகட்டி அமர்ந்து அம்மாவிடம் பேசிவிட்டு வரநேர்ந்ததாக கூறுகின்றனர் அவர்கள். இதுதவிர மற்ற சிலவிஷயங்களும் சரத்குமாரை வளைக்க ஆளும்கட்சி கையிலெடுத்ததாகவும் இதன் பின்னணியில் பல்வேறு விசயங்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் தென்காசியிலும், கட்சியின் மூத்த நிர்வாகி எர்ணாவூர் நாராயணன் நாங்குநேரியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபையில் ஆளும்கட்சியினருக்கு நிகராக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் முதல்வர் ஜெயலலிதாவை வானுயர புகழ்ந்து தள்ளி வந்தார். இதற்கிடையே சரத்குமார் தலைவராக பதவி வகித்த தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் வந்தது. அவரை எதிர்த்து நடிகர் விஷால் மற்றும் நாசர் ஆகியோர் அடங்கிய பாண்டவர் அணி சரத்குமார் அணியை எதிர்த்து தேர்தலில் களம் இறங்கியது. அதிர்ச்சி அடைந்த நடிகர் சரத்குமார் அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக சந்திக்க அனுமதி கேட்டு பல முறை போயஸ் கார்டனுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்பினார். ஆனால் போயஸ் கார்டனில் இருந்து சரத்குமாருக்கு கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. எதிர்பார்த்தபடி நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியை தழுவினார். நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. சரத்குமாருக்கு திறக்காத போயஸ் கார்டனின் வாசல் கதவு நடிகர் விஷால் தலைமையிலான அணிக்கு திறந்தது. முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த நடிகர் விஷால் அணிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். நொந்து போன நடிகர் சரத்குமார் தனது கட்சியின் மூத்த நிர்வாகியும் நாங்குனேரி எம்.எல்.ஏ.,வுமான எர்ணாவூர் நாராயணனை அழைத்து இருவரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வோம் என்றார். ஆனால் எர்ணாவூர் நாராயணனோ அதற்கு மறுப்பு தெரிவித்து அதிமுகவின் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். நொந்து போன நடிகர் சரத்குமார் கடந்த 5 ஆண்டுகளில் என்னை கறிவேப்பிலை மாதிரி அதிமுக பயன்படுத்திக்கொண்டது என்று விமர்ச்சிக்க தொடங்கினார். அதோடு நிற்காமல் தனது மனைவி நடிகை ராதிகா மூலம் இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். நடிகை ராதிகா திமுகவின் கனிமொழியிடம் இது பற்றி பேசினார். கனிமொழி இது பற்றி திமுக தலைவர் கருணாநிதியிடம் தெரிவிக்க இதற்கு மு.க., ஸ்டாலின் நடிகர் சரத்குமாருக்கு முன் அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இல்லை. எனவே அவர் திமுக கூட்டணிக்கு வேண்டாம் என்று முட்டுக்கட்டை போட்டார்.

அதிர்ச்சி அடைந்த நடிகர் சரத்குமார் அடுத்ததாக கதவை தட்டிய இடம் பா.ஜ.. சட்டசபை தேர்தலில் பா.ஜ., வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக அறிவித்தார். அதோடு காமராஜர் பிறந்த ஊரான விருதுநகர் அல்லது சிவகாசியில் போட்டியிடலமா என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். நடிகர் சரத்குமாருக்கு சகல விஷயத்திலும் உதவியாக இருந்து வரும் விருதுநகர் தொழிலதிபர் மதிப்பிரகாசம் மற்றும் சரத்குமார் சார்ந்த சமுதாயத்தின் முக்கிய புள்ளியான கரிக்கோல்ராஜ் ஆகியோர் விருதுநகர் மாவட்டத்தில் நாடார் சமுதாயம் மட்டுமின்றி முக்குலத்தோர், நாயக்கர் உள்பட பல்வேறு சமுதாயத்தினர் கணிசமாக உள்ளனர். எனவே விருதுநகர் மாவட்டம் உங்களுக்கு கை கொடுக்காது என்று சொல்லி கை விரித்து விட்டனர். போற பக்கம் எல்லாம் கதவை சாத்துறாய்ங்களே என்று அப்செட் ஆனார் நடிகர் சரத்குமார். இதற்கிடையே அதிமுக தலைமைக்கு உளவுத்துறையினர்.... தென் மாவட்டங்களில் நாடார் சமுதாய மக்கள் ஆளும்கட்சியான அதிமுக மீது அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே அதிமுக கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் கட்சி இடம் பெற்றால் நல்லது என்று ரிப்போர்ட் கொடுத்தனர். உடனே அதிமுக தலைமை நடிகர் சரத்குமாரை கூட்டணிக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது.

இதற்கிடையே சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் நடிகர் நாசர் தலைமையிலான அணியினர் முன்னாள் நடிகர் சங்கத்தலைவரான சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் நடிகர் சங்க கணக்கு வழக்குகளை ஒழுங்காக ஒப்படைக்கவில்லை. கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர் என்று அறிவித்ததோடு சென்னை போலீஸ் கமிஷனரிடமும் இதுதொடர்பாக புகார் மனு அளித்தனர். இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட உளவுத்துறையினர் நடிகர் சரத்குமாரிடம் பேசினர். நடிகர் சங்க ஊழல் விவகாரம் உங்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்பிருப்பதாக சொல்லி நெருக்கடி கொடுத்தனர். அதிர்ச்சி அடைந்த நடிகர் சரத்குமார் அதிமுகவுடன் கூட்டணியில் சேர அவசர அவசரமாக ஒப்புக்கொண்டார் என்கிறார்கள். இதற்கு பிறகு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். தற்போது அதிமுக தலைமையிடம் நடிகர் சரத்குமார் ஏற்கனவே வெற்றி பெற்ற தென்காசி அல்லது ஆலங்குளம் தொகுதியை கேட்டிருக்கிறார். இதற்கு அதிமுக தலைமை ஓகே சொல்லியிருக்கிறதாம். அதே நேரத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகியான மற்றொரு எம்.எல்.ஏ., எர்ணாவூர் நாராயணன் சென்னை அருகே திருவொற்றியூரை கேட்டிருக்கிறார். அதிமுக தலைமை ஓகே சொல்லியிருக்கிறது.விகடன்.காம்